சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், ராமேசுவரம், தஞ்சாவூர், கொல்லம் உட்பட 4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது டிச.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சில ரயில்கள் தாம்பரம், கடற்கரையில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, பணிகள் இன்னும் முடியாத நிலையில், சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் - சென்னை உழவன் விரைவு ரயில்(16866), கேரள மாநிலம் கொல்லம் – எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் (20636) இன்று (5-ம் தேதி) முதல் டிச.14-ம் தேதி வரையிலும் தாம்பரம் வரை இயக்கப்படும் இதுபோல, ராமேசுவரம் – சென்னை எழும்பூர் சேது விரைவு ரயில் (22662), ராமேசுவரம் – எழும்பூர் விரைவு ரயில் (16752) இன்று (5-ம் தேதி) முதல் டிச.14-ம் தேதி வரையிலும் தாம்பரம் வரை இயக்கப்படும்.
இதேபோல, மேற்கண்ட 4 விரைவு ரயில்களும் டிச.6-ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரையில், சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். இதுதவிர, சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் (22158) நாளை (6-ம் தேதி) முதல் டிச.15-ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் – திருச்சிக்கு வியாழன் தோறும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (09419) டிச.11-ம் தேதி அன்று காட்பாடி, வேலூர், விழுப்புரம் என மாற்றுப் பாதையில் செல்வதால், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டுக்கு செல்லாது.
மறுமார்க்கத்தில் திருச்சி - அகமதாபாத்துக்கு டிச.7, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (09420), வேலூர், காட்பாடி, மேல்பாக்கம், திருத்தணி வழியாக திருப்பி விடப்படுவதால், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணத்துக்கு செல்லாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.