தமிழகம்

தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம்: முதல்வர் விஜய் தலைமையில் நாளை நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை (அக்.29) நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது.

அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது அமைச்சரவை கூட்டம் ஜூலை 16-ம் தேதி நடைபெற்றது.

இதில் பட்ஜெட் தாக்கல், அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதையடுத்து, சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டு, துறைகள்சார்ந்த மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றது. இந்நிலையில் தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை (அக். 29) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள், மின்தடை, கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சர்களிடம் முதல்வர் விஜய் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர நிர்வாக ரீதியாக முக்கிய முடிவுகள், புதிய தொழில் முதலீடுகள், முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒவ்வொரு துறையும் எட்ட வேண்டிய இலக்குகள், எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய தொலை நோக்குத் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தொடர் எதிர்ப்பு வருவதால் அதுகுறித்து முதல்வர் விஜய் கலந்துரையாட இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் உட்பட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதனால் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT