தமிழகம்

காங்கிரஸ் கட்சியில் மாவட்ட அளவில் 38 மேலிட பார்வையாளர்கள் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க 38 காங்கிரஸ் மாவட்ட மேலிட பார்வையாளர்களை டெல்லி காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸில் கட்சி ரீதியில் 77 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்ட தலைவர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் இருந்து வருகின்றனர். இதனால் மாவட்ட தலைவர்களை மாற்ற வேண்டும் உழைப்பவர்களுக்கே பதவி கொடுக்க வேண்டும். வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. மகளிருக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, வெளிப்படையான முறையில் புதிய மாவட்டதலைவர்களை நியமிக்க காங்கிரஸ் டெல்லி தலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்துக்கு தொடர்பில்லாத 38 தலைவர்களை மாவட்ட மேலிட பாரவையாளர்களாக நியமித்துள்ளது. அவர்களும் நேற்று தமிழகம் வந்தனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: இந்த பார்வையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகளை சந்தித்து, மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நிலை, கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும், யார் மாவட்ட தலைவராகவர வேண்டும் என்று விருப்புகிறீர்கள் என கேள்வி எழுப்பி அறிக்கை தயாரிக்க உள்ளனர்.

நிர்வாகிகள் பரிந்துரைக்கும் நபரின் கடந்த கால கட்சி நடவடிக்கைகள், ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்கள், வாக்குத் திருட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் அவரது பங்கு, உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளாரா, பணபலம், வயது, சாதி, மதம், தொகுதியில் செல்வாக்கு உள்ளிட்டவை அடிப்படையில் ஆய்வு செய்து, 3 பேரை பரிந்துரைக்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் மாவட்ட அளவில் வலுவான காங்கிரசை கட்டமைப்பதற்காக, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்காக, சிறந்த மாவட்ட தலைவர்களை கண்டறிந்து புதியதலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன் மூலம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும். இந்த தேர்வு செய்யும் பணிகள் டிச.9-ம் தேதிக்குள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT