ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போரால் துபாயில் சிக்கி தவித்த பயணிகள் நேற்று காலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். பத்திரமாக சென்னை திரும்பிய பயணிகளை கட்டியணைத்து வரவேற்ற உறவினர்கள்.படங்கள்: எம்.முத்துகணேஷ்
சென்னை: துபாயில் இருந்து புறப்பட்ட 2-வது விமானத்தில் 364 பயணிகள் சென்னை வந்து சேர்ந்தனர். துபாயில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பயணிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் ஐக்கிய அரபு, வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இடையே விமான சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னைக்கும் துபாய், பக்ரைன், அபுதாபி,குவைத், மஸ்கட் போன்ற நாடுகளில் இடையே விமான இயக்கம் துண்டிக்கப்பட்டது. கடந்த 2-ம் தேதி அதிகாலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மட்டும் துபாயில் இருந்து 217 பயணிகளுடன் சென்னைக்கு வந்தது.
அதன்பின்பு எந்த விமானமும், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று காலை துபாயில் இருந்து 2-வது எமிரேட்ஸ் விமானம் 364 பயணிகளுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தது.
விமான நிலையத்தில் காத்திருந்த குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர். விமானத்தில் வந்த கடலூரை சேர்ந்த ஜனனி கூறுகையில், துபாயில் குண்டுவெடிப்பு சத்தம், ராணுவ போர் விமானங்கள் பறக்கும் சத்தம் ஓயாமல் கேட்டு கொண்டுதான் இருக்கிறது.
தாக்குதல்கள் அனைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை சேர்ந்த கட்டிடங்கள், அவர்களுடைய ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.
சேலத்தை சேர்ந்த சரவணகுமார், அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக சொந்த ஊர் திரும்ப விமானத்தில் பயணம் செய்தோம். ஆனால், 4 நாட்களாக துபாயில் சிக்கிய பிறகு சென்னை வந்தோம். துபாயில் ராணுவ தாக்குதல்கள் நடந்து கொண்டு இருந்தாலும், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
சென்னையை சேர்ந்த பீட்டர் தெரிவிக்கையில், தமிழகத்தில் டிவிகளில் வரும் செய்திகளில் கூறுவது போல், துபாயில் பெரிய அளவில் பதட்டம் இல்லை. அங்கு மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் வழக்கம் போல் ஈடுபடுகின்றனர்.
திரும்பி வர எங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும், துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் செய்து கொடுத்தனர் என்றார்.
சென்னையை சேர்ந்த தர்ஷினி கூறுகையில், குண்டு வெடிக்கும் சத்தங்கள், ராணுவ விமானங்கள் பறக்கும் சத்தங்கள் தொடர்ந்து கேட்டது, கொஞ்சம் பயமாக இருந்தது. ராணுவ முகாம்கள் இருக்கும் பகுதிகளில் தான் அதிகமான பதட்டம் நிலவுகிறது. ஆனால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.