தமிழகம்

கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்​கிஹோளி வீட்டில் ரூ.3.45 கோடி ரொக்கம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநில பொதுப்​பணித்​துறை அமைச்​சர் சதீஷ் ஜார்​கிஹோளி ஆப்​பிரிக்க நாடு​களில் உள்ள தங்க சுரங்​கங்​களில் முதலீடு செய்​திருப்​ப​தாக புகார் வந்​தது.

இதையடுத்​து, அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் கடந்த 9 மற்​றும் 10 ஆகிய தேதி​களில் பெல​காவி மற்​றும் பெங்​களூரு​வில் உள்ள அமைச்​சர் சதீஷ் ஜார்​கிஹோளி​யின் வீடு, அலு​வல​கம் ஆகிய இடங்​களில் சோதனை மேற்​கொண்​டனர்.

அதோடு, சிக்​கோடி எம்​பி​யும், சதீஷ் ஜார்​கிஹோளி​யின் மகளு​மான பிரி​யங்​கா​வின் வீடு, மகன் ராகுலின் வீடு மற்​றும் அவர்​களின் அலு​வல​கங்​களி​லும் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். மேலும், சதீஷ் ஜார்​கிஹோளி​யின் மைத்​துனரும் வணிக வரித்​துறை கூடு​தல் ஆணை​யரு​மான‌ மஞ்​சு​நாத்​தின் வீடு, அலு​வல​கம் உட்பட 18 இடங்​களில் 2 நாட்​கள் தொடர்ந்து சோதனை நடத்​தினர்.

இந்த சோதனை​யில் ரூ.3.45 கோடி ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதில் ரூ.2 கோடி அமைச்​சர் சதீஷ் ஜார்​கிஹோளி​யின் வீட்​டில் இருந்து கைப்​பற்​றப்​பட்​டது. இந்த சோதனை​யில் அவர் தென்​னாப்​பிரிக்​கா, காங்​கோ, ஜாம்​பியா ஆகிய நாடு​களில் உள்ள தங்க சுரங்​கங்​களில் முதலீடு செய்​தது தொடர்​பான ஆவணங்​கள் சிக்​கின.

இதுத​விர அவரது ச‌ர்க்​கரை ஆலை, கட்​டு​மான நிறு​வனம் தொடர்​பான ஆவணங்​களும் சிக்​கின. பொதுப்​பணித்​துறை ஒப்​பந்​த​தா​ரர்​களிடம் இருந்து கமிஷன் பெற்​றது தொடர்​பான டைரி​யும் சிக்​கி​யுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதனிடையே, இது அரசி​யல் பழி​வாங்​கும் நடவடிக்கை என்​றும் அமலாக்​கத் துறை​யின் வழக்கை சட்​டப்​படி சந்​திப்​பேன் என்​றும் சதீஷ் ஜார்​கிஹோளி தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT