தமிழகம்

கிருஷ்ணகிரியில் 320 பேருக்கு டெங்கு, 85 பேருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு: ஆட்சியர் தகவல்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் இதுவரை 320 பேர் டெங்கு, 139 பேருக்கு எலி காய்ச்சல் மற்றும் 85 பேர் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக டெங்கு, உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் தினேஷ், “கிருஷ்ணகிரியில் டெங்கு, எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்), உண்ணி காய்ச்சல் உள்ளிட்ட கொசு மற்றும் எலி மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த 2 வார கால மாபெரும் தூய்மைப் பணி பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடப்பாண்டு மட்டும் இதுவரை 320 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல், 139 நபர்களுக்கு எலிக்காய்ச்சல் மற்றும் லெப்டோஸ்பைரோசிஸ், 85 நபர்களுக்கு உண்ணி காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளார்கள்.

மேலும், எலி மற்றும் கொசு மூலம் பரவும் நோய்களின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் 2 வார கால தீவிர தூய்மைப் பணி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. தேங்கி நிற்கும் மழைநீர், அடர்ந்த புதர்கள், கழிவுகள் மற்றும் பராமரிக்கப்படாத சுற்றுப்புறச் சூழல் ஆகியவை கொசு இனப்பெருக்கத்திற்கும் எலி மூலம் பரவும் நோய்களின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக அமைகிறது.

இதனை தடுக்கும் விதமாக, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் என 7,094 பொது இடங்களில் கட்டமைப்பு ரீதியான, ஒவ்வொரு கட்டிடத்திலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். இந்த பிரச்சாரத்தின் முக்கிய பணிகளாக, கூரை அல்லது மொட்டை மாடி தூய்மைப்படுத்துதல், குப்பைகள், தேங்கிய நீர் அகற்றுதல், மேல்தொட்டிகள் சுத்தம் செய்து குளோரினேற்றம் செய்தல், குடிநீர் பாதுகாப்பு உறுதி, புதர்கள் மற்றும் கொசு மற்றும் எலி வளைகளை அகற்றி மூடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு கட்டிடத்திற்கும் உரிய பொறுப்பு அலுவலர், பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று, சுகாதாரத் துறை பணியாளர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை மேற்பார்வையிடுவார்கள். தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அவர்களின் வளாகங்களில் சொந்த குழுவைக் கொண்டு தூய்மைப் பணியை மேற்கொண்டு, புகைப்படச் சான்றுகளுடன் கூடிய அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த 2 வார கால தீவிர தூய்மைப் பணி பிரச்சாரத்தின் மூலம் கொசு இனப்பெருக்க இடங்களை முற்றிலும் அகற்றி, பாதுகாப்பான குடிநீர் வழங்கி, மாவட்ட மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் இந்த பிரச்சாரத்தில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜெகநாதன், மாநகர சுகாதார அலுவலர் அஜிதா, உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) வடிவேல், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT