சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற தங்க நகைகளை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திரபாபு, ஆர்.மாலா உள்ளிட்டோர்.
திருச்சி: தமிழகத்தில் சமயபுரம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உட்பட 9 கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற 296.600 கிலோ தங்கம், சமயபுரத்தில் இருந்து மும்பை உருக்காலைக்கு நேற்று வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஈச்சனாரி விநாயகர் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 9 கோயில்களில் 296.
600 கிலோ தங்கம் பக்தர்கள் மூலம் காணிக்கையாக வரப் பெற்றன. இந்த தங்கத்தை மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தங்கத்தை பொதுத்துறை வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது.
இதில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள்துரைசாமி ராஜு, ரவிச்சந்திரபாபு, ஆர்.மாலா ஆகியோர் முன்னிலையில் வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் எல்.வேலப்பனிடம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒப்படைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.தர், இணை ஆணையர்கள் இரா.வான்மதி, எஸ்.ஞானசேகரன், எம்.சூரியநாராயணன், வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் பி.ரமேஷ், மண்டல துணைமேலாளர் எம்.நவீன், சமயபுரம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன் மற்றும் பல்வேறு கோயில்களின் அறங்காவலர் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
கோயில்களுக்கு வட்டித் தொகை
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 21 கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பயன்படுத்த இயலாத பொன் இனங்களை உருக்கி கிடைக்கப் பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லி கிராம் சுத்தத்தங்கக் கட்டிகள், பொதுத் துறை வங்கி ஒன்றின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் அந்தந்த கோயில்களின் பெயரில் தங்கக் கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் ஆண்டுக்கு கோயில்களுக்கு ரூ.17.75 கோடி வட்டித் தொகை கிடைக்கிறது என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.