மதுரை: மானாமதுரையில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் மரண வழக்கு சிபிஐசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் இருவர் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ஆகாஷ்டெல்சன், குணா ஆகியோரை மானாமதுரை போலீஸார் கைது செய்தனர். அப்போது போலீஸாரிடம் இருந்துதப்பியோட முயன்ற ஆகாஷ் டெல்சனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், ஆகாஷ் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஆகாஷின் உடலை முழுவதுமாக எக்ஸ்ரே செய்து டீன் மேற்பார்வையில் உடற்கூராய்வு செய்யவும், அதை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யவும், ஆகாஷ் டெல்சனின் மரணத்தை காவல் மரணம் என அறிவித்து போலீஸார் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் தெரிவிக்கும்போது, மேலப்பசலை ரயில் நிலையப் பகுதியில் ஆகாஷ்டெல்சன் கைது செய்யப்பட்டார். தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் காயமடைந்தார்.
7-ம் தேதி 10 மணிக்கு காயம் காரணமாக அவரால் நகர முடியாத நிலை உருவானதால், நீதித்துறை நடுவர், அரசு மருத்துவமனையில் சந்தித்து காவலில் வைக்க உத்தரவிட்டார். அவருக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது அவரது உடல்நிலை சீராகவே இருந்தது. அவரைச் சந்தித்துப்பேச அவரது தாயாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.
அப்படியிருக்கும்போது அவரை எப்படி போலீஸ் காவலில் வைத்து தாக்கியிருக்க முடியும். இது காவல் மரணம் அல்ல என வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதி, ஆகாஷூக்கு என்ன காயம் ஏற்பட்டது எனக்கேட்டார்.
அதற்கு அரசுத் தரப்பில், போலீஸில் பிடிபடாமல் இருக்க தப்பியோடியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது எனக் கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து நீதிபதி, 26 வயது இளைஞர் எலும்பு முறிவால் உயிரிழந்தாரா அப்படி என்றால் அதுகுறித்து விசாரிக்க வேண்டும் தானே என்றார்.
அரசுத் தரப்பில், ஆகாஷ் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்யவும், மானாமதுரை காவல் நிலைய சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இவற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, நீதிமன்றத்தின் கோரிக்கைகளை அரசுத் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. சில கோரிக்கைகள், வழக்குத் தொடர்வதற்கு முன்பே ஏற்கப்பட்டுள்ளது.
எனவே மனுதாரர்தரப்பு, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் நடத்தப்பட்டு வரும் சாலைமறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லவேண்டும். இதைப் போராட்டத்தில் ஈடுபடுவோரிடம் மனுதாரர் அறிவுறுத்த வேண்டும் என்றார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, விரைவில் உடற்கூராய்வு செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். விசாரணை மார்ச் 11-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே மானாமதுரை பகுதியில் போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணமும் பாதுகாப்பும் வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.