சென்னை: வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை என அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள், வேறு நாடுகளுக்கு சைபர் க்ரைம் மோசடி கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு அங்கு சைபர் மோசடி செய்ய பயன்படுத்தப்பட்டனர்.
இதை அறிந்த தமிழக சைபர் க்ரைம் போலீஸார் கடத்தப்பட்டவர்களை மீட்க ‘ஆபரேஷன் ப்ளு ட்ரையாங்கிள்’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வெளிநாட்டில் வேலை எனக்கூறி பாங்காக் அழைத்து செல்லப்பட்டவர்கள், அங்கு துப்பாக்கி முனையில் மிரட்டி சட்ட விரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக சீனா மற்றும் மியான்மர் சைபர் மோசடி கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அக்கும்பல் அவர்களை தாக்கி சிறை வைத்தது. அதோடு சைபர் மோசடிகளில் ஈடுபட பயிற்சியளித்து அவர்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டி உள்ளது. இக்கும்பலிடமிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 465 பேர் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக 395 பேர் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 29 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.