கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை கனமழை காரணமாக அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று அங்கிருந்து மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும் காட்சி. படம்: பிடிஐ
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கபினி, ஹாரங்கி ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. இதனால் அணைகளின் பாதுகாப்பை கருதி தமிழகத்துக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, வீராஜ்பேட்டை, சோமவார் பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது.
குடகு மாவட்டம் முழுவதும் கொட்டித் தீர்க்கும் கனமழையால் காவிரி ஆற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரியில் 104.5 மிமீ மழை பதிவானது.
தலக்காவிரியை சுற்றியுள்ள பகுதியில் பெய்துவரும் கனமழையால் காவிரி ஆறும் கன்னிகா ஆறும் இணையும் திரிவேணி சங்கமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கோயில்கள், மேம்பாலங்கள், தடுப்பணைகள் மூழ்கியுள்ளன. இதனால் தலக்காவிரி மடிகேரி இடையேயான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் முக்கிய துணை ஆறு, கபினி உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கபினி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது.
இதேபோல ஹாசன், சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, கபினி அணையின் மொத்த உயரமான 2284 அடியில் 2282.60 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 820 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து தமிழகத்துக்கு 27 ஆயிரத்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 32 ஆயிரத்து 124 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 101.30 அடியாக (மொத்த அடி 124.80) உயர்ந்திருக்கிறது. கபினி, ஹாராங்கி ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. இன்னும் ஓரிரு நாளில் இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேகேதாட்டு அணையை எதிர்த்து புதிய மனு
மேகேதாட்டு அணைத் திட்டம் விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அனுமதியோ, உத்தரவையோ பிறப்பிக்க கூடாது என்று தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி படுகை என்பது ஒரு பற்றாக்குறை படுகையாக இருப்பதால் சிறிய அளவிலான நீர் திட்டங்களுக்கு கூட காவிரி நதிநீர் தீர்ப்பாயம் முன்பு அனுமதி வழங்கவில்லை. கர்நாடகா சிறிய நீர் பாசன திட்டங்களுக்கு அனுமதி கோரிய போது முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.
புதிய திட்டங்களை செயல்படுத்த மதிப்பிடுவது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறும் செயல். அது கீழ்ப் பாசன மாநிலங்களைப் பாதிக்கும்.
காவிரி நீர் விவகாரத்தில் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. காவிரியில் புதிய நீர் திட்டங்களை ஆய்வு செய்வது, அனுமதி வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.