சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மின்வெட்டைத் தடுக்க 2,600 ஒப்பந்த ஊழியர்களை மின்வாரியம் நியமனம் செய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின்வாரியப் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக கடந்த இரண்டு வாரங்களில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, இரவு நேரங்களிலும் மின்பாதைகளைக் கண்காணித்து பழுதுகளைச் சரிசெய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், உள்ளூர் தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களை தற்காலிகமாகப் பணியமர்த்திக் கொள்ள மேற்பார்வைப் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
40 சிறப்புக் குழுக்கள்
சென்னையில் மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு காண சென்னையில் 40 சிறப்புக் குழுக்கள், 300 பொறியாளர்கள், 2,200 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுவதைத் தடுக்க அடையாளம் காணப்பட்ட 1,500 மின்விநியோகப் பெட்டிகளில் 80 சதவீத பெட்டிகள் உயர்த்தப்பட்டதாகவும் அத்துடன், 20 ஆண்டுகளுக்கும் மேலான 1,600 மின்மாற்றிகளை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.