காரைக்கால் / சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால், தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு, காசாக்குடிமேடு, மயிலாடுதுறை, நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் ஒரு படகில் கடந்த 15-ம் தேதியும், காரைக்கால், நாகை நம்பியார் நகர், சீர்காழி திருமுல்லைவாசல் பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த 11-ம் தேதியும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவர்கள் 25 பேரையும் கைது செய்ததுடன், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்த தகவல் காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும், மீன்வளத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தாரும், மீனவப் பஞ்சாயத்தார்களும் தெரிவித்துள்ளனர்.
விஜய் கண்டனம்: இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: மீனவர்களுக்கு தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும்.