கோப்புப் படம்
பழநி: கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் வட்டக்கானல் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார், நக்சல் தடுப்புப் பிரிவு படையினர் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானலில் டிசம்பர் முதல் மார்ச் வரை இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து வட்டக்கானல் பகுதியில் தங்குவர். இங்கு வரும் இஸ்ரேலியர்கள் மொத்தமாகக் கூடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, தற்போது வட்டக்கானல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கியுள்ளனர்.
தற்போது ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கொடைக்கானல் போலீஸார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு படையினர் துப்பாக்கியுடன் 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சோதனைச் சாவடி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. நிலைமை சீராகும் வரை இந்தப் பாதுகாப்புப் பணி தொடரும் என போலீஸார் தெரிவித்தனர்.