அர்ச்சனா பட்நாயக்
சென்னை: வாக்களிப்பதன் அவசியம் குறித்து தமிழகம் முழுவதும் 23,616 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP) திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிப்பது, தார்மீக அடிப்படையிலான வாக்களிப்பை ஊக்குவிப்பது மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையே முழுமையான தேர்தல் பங்கேற்பை உறுதிசெய்வதாகும்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சட்டமன்ற தொகுதிகள் அளவில் இந்த முன்னெடுப்புகளைத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. பெரிய அளவில் 1,486, சிறிய அளவில் 22,130 நிகழ்ச்சிகள் என மொத்தம், 23,616 நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேர்மையான வாக்களிப்பு: பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் மாரத்தான் போட்டிகள், மனிதச் சங்கிலிகள், வாக்காளர் உறுதிமொழிப் பிரச்சாரங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் எழுத்தறிவு சங்கங் களின் செயல்பாடுகள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, ஒவ்வொரு மாவட்டமும் அதன் கலாச்சார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தனித்துவமான சின்னங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு செய்திகளைத் திறம்படப் பரப்பி வருகின்றன.
இந்நிகழ்ச்சிகளில், வாக்களிப்பதன் முக்கியத்துவம், நேர்மையான வாக்களிப்பு முறைகள், வாக்காளர் வசதிக்கான நடவடிக்கைகள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு முயற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், இதர நலிந்த பிரிவினர்களை குறிவைத்து தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இம்முயற்சிகள், மாநிலத்தில் சுதந்திரமான, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய தேர்தலை நடத்துவதற்கான உறுதியை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.