சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 

 
தமிழகம்

தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் 4 விசைப் படகுகளை தனித்தனியாக சிறைப் பிடித்து ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை படையினர் சிறைப்பிடித்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். இதில் அலேக்ஸ்டேனியல், அந்தோணி கிருமிராஜ் ஆகியோரின் 2 விசைப் படகுகள் நெடுந்தீவு அருகே புதன்கிழமை இரவு இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

இரண்டு படகுகளிலிருந்த விமல்ராஜ், தபோன் ராஜா, பாக்கியராஜ், தீபக், ஆரோக்கிய பிரச்சிஸ், இம்மானுவேல், சந்தியா ஸ்டூவர்ட், பாக்லின், அந்தோணி குணால், காளிதாஸ், சந்தியா ஆல்டன், வின்சர் ஆகிய 12 மீனவர்ளை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர்.

          

இந்த 12 மீனவர்கள் மீதும், எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் மார்ச் 4 வரையிலும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற வெங்கடேசன் என்பவர் விசைப்படகிலிருந்து புவனேஷ் நம்பு, முருகராஜ், ஜூட் , ராமக்கிருஷ்ணன், அருள்தாஸ், பழனிச்சாமி ஆகிய 6 மீனவர்களும், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மலைராஜன் என்பவரது விசைப்படகை கைப்பற்றி, படகிலிருந்த ராமசாமி, நாகூர் கண்ணன், பாலசுப்பிரமணியன், ராஜமணி ஆகிய 4 மீனவர்கள் என 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பகுதியில் சிறைப்பிடித்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். இந்த 10 மீனவர்களும் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர் சங்கம் கண்டனம்:

கச்சத்தீவு திருவிழா நடைபெற உள்ள நிலையில் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என ஏஐடியுசி மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏஐடியுசி மீனவர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை, கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அத்துமீறிச் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

மேலும், மீனவர்களின் வாழ்வாதாரமான 4 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை மீனவக் கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் அராஜகப்போக்கு மீண்டும் அரங்கேறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இது இந்திய இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகும். வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவு மீட்பு மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்ய மத்திய அரசு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT