இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்த மாணவர்கள், பெற்றோர்.படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதினர்

அடுத்த மாதம் முடிவுகள் வெளியாகிறது

செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 5,500 மையங்களில் நேற்று நடைபெற்றது. 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை ‘நீட்’ தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது.

அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் உள்ளிட்ட 14 வெளிநாடுகள் என சுமார் 5,500 மையங்களில் தேர்வு நடைபெற்றது. விண்ணப்பித்த 22.80 லட்சம் பேரில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் (97 சதவீதம்) பங்கேற்றனர். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை உட்பட 31 நகரங்களில் தேர்வு நடந்தது. சென்னையில் 30 ஆயிரம் பேர் உட்பட தமிழகத்தில் 1.75 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு மையங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. தேர்வு மையங்களைக் கண்காணிக்க ஒருங்கிணைப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.

முன்னதாக, காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு தேர்வு அறைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் மாணவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. தாமதமாக வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையத்துக்குள் ஹால் டிக்கெட்டை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடி, தாயத்து, பெல்ட் அணிந்து வந்தவர்கள் அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்த பிறகு, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகள், அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள், செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை.

தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும்.

இயற்பியல் பாடக் கேள்விகள் கடினமாகவும், வேதியியல், உயிரியல் பாடக் கேள்விகள் எளிதாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறினர். நீட் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT