

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சில மாவட்டங்களில் மே 9-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தினமும் பல நகரங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. பகலில் கடும் வெயிலும், மாலை, இரவில் கடும்புழுக்கமும் நிலவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, சூரிய பகவான், கிருத்திகை நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கி, பரணி நட்சத்திரத்தின் 3, 4-வது பாதங்களை அடைவது வரையிலான காலம் ‘அக்னி நட்சத்திர’ காலம் ஆகும்.
அந்த வகையில், மே 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் சூரிய பகவான் தனது தேரை மெதுவாக செலுத்துவதால், வெயிலின் உக்கிரம் அதிகரித்து காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். 5 முதல் 7-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 84 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: தெற்கு சத்தீஸ்கர் முதல் தெலங்கானா, ஆந்திரா, தமிழகம் வழியாக குமரிக்கடல் வரை சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 9-ம் தேதி வரைமிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.