சென்னை குரோம்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், வெள்ளம் பாதித்த நேபாளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களது குடும்பத்தினரை அமைச்சர் வெங்கட் ரமணன் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். படம்: எம்.முத்துகணேஷ்
சென்னை: நேபாள வெள்ளத்தில் சிக்கிய பிறகு மீட்கப்பட்ட 219 தமிழர்கள் இன்று நள்ளிரவுக்குள் சென்னை வந்தடைவார்கள் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுற்றுலா சென்ற ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 57 பேரில் 21 பேர் ராணுவத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு கடந்த 28-ம் தேதி டெல்லி வழியாக விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த 14-ம் தேதி கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 7 பேர் உள்ளிட்ட 49 பேரின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுடைய உறவினர்கள் ஜிஎஸ்டி சாலையில் நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமிழக அரசின் சார்பில் அமைச்சர் வெங்கட ரமணன் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி ஆகியோர் நேபாளத்தில் சிக்கிய 7 பேரின் உறவினர்களை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அரசு மேற்கொண்டு வரும் தீவிர மீட்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வெங்கட ரமணன் கூறுகையில், “நேபாளத்தில் உள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மீட்புக் குழுவினர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தமிழர்கள் தங்கியுள்ளார்களா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். மீட்கப்படுபவர்களின் விவரங்கள் உடனுக்குடன் பட்டியலிடப்படுகின்றன. காணாமல் போனவர்களையும் விரைவில் கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் டெல்லியில் முகாமிட்டிருந்த அமைச்சர்கள் குழுவில் தென்னரசு தவிர மற்ற அனைவரும் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்ற 319 பேரில் 219 பேர் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்கள் அனைவரும் 31-ம் தேதி (இன்று) நள்ளிரவுக்குள் சென்னை வந்தடைவார்கள்.
காணாமல் போன குரோம்பேட்டையைச் சேர்ந்த 49 பேர் உட்பட எஞ்சிய 100 பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்த விவரங்களை உறுதிப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இருந்து பெங்களூரு வழியாகவும் சிலர் நேபாளம் சென்று உள்ளனர். மத்திய அரசின் மூலமாக, அவர்களை விரைவாகக் கண்டுபிடிக்கும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.