தமிழகம்

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான குடியிருப்புகள் கட்ட கட்டாயப்படுத்தி பதியப்பட்ட நிலத்துக்கு 200% இழப்பீடு வழங்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சு​னாமி​யால் பாதிக்​கப்​பட்ட மீனவர்​களுக்​கான குடியிருப்​பு​கள் கட்ட முதி​ய​வரை கட்​டாயப்​படுத்தி பதி​யப்​பட்ட நிலத்​துக்கு 200 சதவீத இழப்​பீட்டை 12 சதவீத வட்​டி​யுடன் 2013 முதல் கணக்​கிட்டு வழங்க செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யருக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

கடந்த 2004-ம் ஆண்டு டிச.26ம் தேதி ஏற்​பட்ட சுனாமி பேரழி​வால் பாதிக்​கப்​பட்ட மீனவர்​களுக்கு கிறிஸ்​துவ தொண்டு நிறு​வனம் சார்​பில் குடி​யிருப்​பு​கள் கட்​டு​வதற்​காக செங்​கல்​பட்டு மாவட்​டம் செய்​யூர் தாலு​கா​வில் அரசு சார்​பில் நிலங்​கள் கையகப்படுத்தப்பட்​டன. இந்​நிலை​யில் மீனவ குடி​யிருப்​பு​கள் கட்டு​வதற்​காக கையகப்​படுத்​தப்​பட்ட தனது 4 ஏக்​கர் நிலத்​துக்கு உரிய இழப்​பீடு வழங்​கவில்லை என கூறி 81 வயது முதி​ய​வ​ரான ஆதி​கேசவலு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்​கு, நீதிபதி கிருஷ்ணன் ராம​சாமி முன்​பாக விசாரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர் ஆஜராகி, "கையகப்​படுத்​தப்பட்ட நிலத்துக்கு வழி​காட்டி மதிப்​பை ​விட மிகக் ​குறைந்த தொகையே அரசால் இழப்​பீ​டாக வழங்​கப்​பட்​டுள்​ளது. கட்​டாயப்​படுத்தி மனுதாரரிடமிருந்து அந்த நிலத்தை அரசுக்​காக பதிவு செய்துள்ளனர்" என வாதிட்​டார்.

அதற்கு அரசு தரப்​பில், "மனு​தா​ரரின் மகன் கடந்த 2005-ம் ஆண்டு ஒரு சென்ட் நிலத்​துக்கு ரூ.520 வீதம் இழப்​பீடு பெற சம்​மதம் தெரிவித்​தார். அதனடிப்​படை​யிலேயே கடந்த 2013-ம் ஆண்டு பத்திரப் ​ப​திவு செய்​யப்​பட்​டது" என வாதிடப்​பட்​டது.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, "குடும்​பத்​தில் உள்ள ஒரு உறுப்​பினர் கொடுத்த சம்​மதத்​தின்​ பேரில் அந்த நிலத்​துக்கு குறை​வான இழப்​பீட்​டுத் தொகையை நிர்​ண​யம் செய்​திருப்​பது ஏற்​புடையதல்ல. மேலும், ஒரு உறுப்​பினரின் சம்​மதம், ஒட்டுமொத்த குடும்​பத்​தை​யும் கட்​டுப்​படுத்​தாது. 2005ம் ஆண்டு நிர்​ண​யம் செய்த தொகை 2013-ல் செய்​யப்​பட்ட பத்​திரப்​ பதிவுக்கு ஈடா​காது.

எனவே, மனு​தா​ரரை அழைத்து விசா​ரித்து 2013ம் ஆண்டு பதியப்பட்​ட​போது இருந்த உண்​மை​யான சந்தை மதிப்​பின் அடிப்படை​யில் அவருக்கு 200 சதவீத இழப்​பீட்டை 2013 முதல் 12 சதவீத வட்​டி​யுடன் வழங்க வேண்​டும்" என செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யருக்கு உத்​தர​விட்டு வழக்​கை முடித்​து வைத்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT