தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள, ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ போஸ்டரை வெளியிட்ட புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர். உடன் அதிகாரிகள் தில்லை வேல் மற்றும் கந்தசாமி. | படம்: செ. ஞானபிரகாஷ் |
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக 18 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சீடு திருடிய சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது வரை ரூ. 8.4 கோடி பணம், மதுபானங்கள், தங்கம் வெள்ளி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.9) நடக்கிறது.
தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடக்கும். மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பதற்றமானவை 209.
அதி பதற்றமானவையாக 5 என கண்டறியப்பட்டுள்ளன. 3 இடங்களில் தனித்துவமான வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளோம். இவற்றை பெண் அலுவலர்கள் மட்டுமே நிர்வகிப்பர்.
புதிய அரசு ஊழியர்கள் 15 வாக்குச்சாவடிகளையும், மாற்றுத்திறனாளி அதிகாரிகள் 2 வாக்குச்சாவடிகளையும் நிர்வகிப்பர். வாக்குப்பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுவர். மைக்ரோ அப்சர்வர்கள் 173 பேரும், போலீஸார் 2800 பேரும் பணியில் ஈடுபடுவர்.
புதுச்சேரியில் ரூ. 77.25 லட்சம்பணம், மதுபானங்கள் ரூ. 65 லட்சம், போதைப்பொருட்கள் ரூ. 21 லட்சம், தங்கம், வெள்ளி போன்றவை ரூ. 6.71 கோடி என மொத்தம் ரூ. 8.4 கோடி பறிமுதல் செய்துள்ளோம்.
புதுச்சேரி தேர்தலை பார்வையிட கிர்கிஸ்தான், ஐவரி கோஸ்ட், மால்டோவா, மங்கோலியா, கயானா, பூடான் ஆகிய நாடுகளில் இருந்து 9 உறுப்பினர்கள் புதுச்சேரி வந்துள்ளனர்.மொத்தம் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக அரசு ஊழியர்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 12,591 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. இம்முறை 90 சதவீத வாக்குப்பதிவு வரை எதிர்பார்க்கிறோம்.
வயதானவர்கள், கர்ப்பிணிகள்,மாற்றுத்திறனாளிகள் உடனே வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குச்சீட்டை பொருத்தும்போது, யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்ற சுயேச்சை வேட்பாளரை கைது செய்துள்ளோம்.
புதுச்சேரியில் 3, காரைக்கால், மாஹே, ஏனாமில் தலா ஒன்று என வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும். இவ்வாறு தெரிவித்தார். உடன் தேர்தல் துறை அதிகாரிகள் தில்லைவேல், கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.