

சென்னை: ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கையை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியதாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் சல்மா எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த போர் பதற்றம், தற்போது இரண்டு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில், திமுக எம்.பி.சல்மா தனது எக்ஸ் தளத்தில், “பாகிஸ்தானின் தலையீட்டால் போர் நின்றிருக்கிறது. விஸ்வகுரு பாவம்.. சங்கிகள் எப்படி ஜீரணிக்கப்போகிறீர்கள்?” என்று பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தானைப் புகழ்ந்தும், பிரதமர் மோடியை விமர்சித்தும் அவர் பதிவிட்ட இந்தக் கருத்து தேசிய அளவில் விவாதமானது.
சல்மாவின் இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், “சிறுபான்மை வாக்கு வங்கிக்காக சல்மா கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறார்.
உக்ரைன் - ரஷ்யா போர் உள்ளிட்ட சர்வதேச நெருக்கடிகளைத் தீர்க்க உலக நாடுகளால் ‘விஸ்வகுரு’வாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பிரதமர் மோடி. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசி வரும் சல்மா மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும்” என்றார்.
சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து, சல்மா தனது பதிவை நீக்கினார். இதுகுறித்து சல்மாவிடம் கேட்டபோது, “பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது என்று நான் சொல்லவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லியிருக்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சொல்லியிருக்கிறார். அதைதான் நானும் பதிவு செய்தேன். ஜெய்ராம் ரமேஷ் பதிவு செய்தால் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.
பெண் என்பதாலும், இஸ்லாமியர் என்பதாலும் தவறான கருத்துகளை பாஜகவினர் பதிவிடுவார்கள் என்பதால் நானே அந்த பதிவை நீக்கிவிட்டேன்’, என்றார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே வார்த்தைப் போராக மாறியுள்ளது.