சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், நகர் ஊரமைப்பு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்ட அனுமதி உள்ளிட்ட பிற சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மோசடி செய்ததாக தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.டி.அரசக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அரசக்குமார் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கப்பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான முத்துக்குமார், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில், “இந்த மோசடி வழக்கில் இதுவரை 177 புகார்கள் வந்துள்ளன.
அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. முன்ஜாமீன் கோரும் இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதி, பெறப்பட்டுள்ள புகார்கள் மீது துரிதமாக விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி, முன்ஜாமீன் கோரும் இந்த மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு (செப்.10) தள்ளிவைத்துள்ளார்.
இதற்கிடையே முத்துக்குமார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.