தமிழகம்

பழநி இடும்பன் கோயிலில் 17 பவுன் தங்க நகைகள், வெள்ளி வேல் மாயம்

ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: பழநியில் உள்ள இடும்பன் கோயிலில் 17 பவுன் தங்க நகைகள், 52 கிராம் வெள்ளி வேல் மாயமானது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பழநி அடுத்த சிவகிரிப்பட்டியில் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் மூலவர் இடும்பன் ஜடா முடியோடும், இடது தோளில் சிவகிரி, சக்திகிரி ஆகிய 2 மலையை காவடி தூக்கிக் கொண்டு, கையில் அரிவாளும், பிரம்ம தண்டத்தோடும் அருள்பாலிக்கிறார்.

பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் தங்கள் வழிபாடு மற்றும் பிரார்த்தனையை இடும்பன் கோயிலில் இருந்து தொடங்குகின்றனர். தற்போது இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கோயில் பதிவேடுகள், சுவாமி நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, 17 பவுன் தங்க நகைகள், 52 கிராம் வெள்ளி வேல் ஒன்றும் மாயமானது தெரிய வந்துள்ளது.

கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியும், தேடிப் பார்த்தும் நகைகள் கிடைக்காததால் அறநிலையத்துறை அதிகாரிகள் வேறு வழியின்றி மே 30-ம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, பழநி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோயில் நகைகள் காணாமல் போன விவகாரம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் வெளியில் சொல்லாத போதிலும், பக்தர்களுக்கு தெரிய வந்தததால் பரபரப்பு நிலவி வருகிறது. கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தெரியாமல் நகைகள் திருடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் எதையும் வாய்த்திறக்க மறுக்கின்றனர்.

SCROLL FOR NEXT