புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள மின்தூக்கியில் சிக்கி தவித்த 17 பேரை தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.
சென்னை: ஆதம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் சங்கர். இவரது மனைவி சாந்தி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி சென்றனர். பின்னர், அங்கிருந்து பறக்கும் ரயில் மூலம், ஆதம்பாக்கம் அருகே அமைந்துள்ள புழுதிவாக்கம் ரயில் நிலையத்துக்கு இரவு 9:30 மணிக்கு வந்தனர்.
அங்கிருந்து இருவரும் மின் தூக்கி (லிஃப்ட்) மூலமாக கீழே இறங்க முடிவு செய்தனர். அங்கு ஏற்கெனவே, 15 பேர் காத்திருந்தனர். அவர்கள் அனைவரும் மின்தூக்கி வந்தவுடன் அதில் ஏறினர்.
மின்தூக்கி புறப்பட்ட சில நொடியில் 2-வது மாடிக்கும் - முதல் மாடிக்கும் இடையே பாதியிலேயே நின்றது. இதில் பயணம் செய்த 17 பேரும் சிக்கித் தவித்தனர். மேலும், உதவி கேட்டு குரல் எழுப்பினர்.
இருப்பினும் யாரும் வரவில்லை. இதையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கும், மின் தூக்கியில் ஒட்டப்பட்டிருந்த அவசர உதவி எண்ணுக்கும் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், எந்தவித உதவியும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, சங்கர் செல்போன் மூலமாக, தனது நண்பரை அழைத்து அவர் மூலம் காவல்துறை அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில், அடுத்த 15 நிமிடத்தில், வேளச்சேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி பிரபாகரன் தலைமையிலான 5 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் புழுதிவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
பின்னர், நீண்ட போராட்டத்துக்குப் பின், தீயணைப்பு துறை வீரர்கள் 2-வது தளத்தில் உள்ள மின்தூக்கி நுழைவு வாயிலை திறந்து, அதன் வாயிலாக மின் தூக்கி மேற்பகுதிக்கு சென்று, அதில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியை அகற்றினர்.
பின்னர், அதன் வழியாக முதலில் 4 குழந்தைகளை மிகவும் பத்திரமாக மீட்டனர். பின்னர் மற்ற 13 பேரையும் மீட்டனர். இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறுகையில், “தெற்கு ரயில் வேயின் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் இல்லை.
மின்தூக்கியில் ஒட்டப்பட்ட உதவி எண்ணும் இயங்கவில்லை. சிறிது தாமதம் ஏற்பட்டு இருந்தால் கூட விபரீதம் ஏற்பட்டிருக்கும். ரயில்வே நிர்வாகம் இனிமேலாவது கவனமாக செயல்படவேண்டும். ரயில் நிலையத்தில் பயணிகளின் அடிப்படை வசதிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
அப்போது தான் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க முடியும்” என்றனர். இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரியிடம் கேட்டபோது, ``மின்தூக்கி தான் பிரச்சினை.
இதை பராமரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்'' என்றார்.