ஜெகதீஷ் சந்திர பர்மா பாசுனியா

 
தமிழகம்

"17 என்சிபிஐ எம்.பிக்கள் பாஜகவில் இணையவுள்ளனர்" - திரிணமூல் அதிருப்தி எம்.பி தகவல்

வெற்றி மயிலோன்

கொல்கத்தா: நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 20 அதிருப்தி எம்.பி.க்களில் 17 பேர் அக்டோபர் மாதத்தில் பாஜகவில் இணையவுள்ளதாக, அக்கட்சியின் எம்.பி ஜெகதீஷ் சந்திர பர்மா பாசுனியா தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய கூச் பெஹார் தொகுதி எம்.பியான பாசுனியா, "நாங்கள் 17 எம்.பி.க்களும் ஒன்றாக பாஜகவில் இணையவுள்ளோம். 20 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் கட்சி மாறவிருப்பதால், கட்சித் தாவல் தடைச் சட்டம் எங்களுக்குப் பொருந்தாது. அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள துர்கா பூஜைக்கு முன்னரோ அல்லது பின்னரோ பாஜகவில் நாங்கள் இணைவோம்.

அபு தாஹர் கான், கலிலூர் ரஹ்மான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணையமாட்டார்கள். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பார்கள். அவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் அல்லது துறைகள் வழங்கப்படலாம்” என்று தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸின் 28 மக்களவை எம்.பி.க்களில் 20 பேர், கடந்த ஜூன் மாதம் திரிபுராவை சேர்ந்த நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா (NCPI) கட்சியில் இணைவதாக அறிவித்தனர். மக்களவையில் இந்தக் குழு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்து வருகிறது. இந்த இணைப்புக்கு முன்பு 'நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா'வுக்கு எந்த எம்.பி.க்களும் இல்லை. இருப்பினும், அவையில் இந்தக் குழு இன்னும் என்சிபிஐ கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை.

மே மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்தது. அக்கட்சியின் 80 சட்டப்பேரவை உறுப்பினர்களில் சுமார் 60 பேர் கட்சித் தலைமைக்கு எதிராகத் திரும்பி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ரிதாப்ரதா பானர்ஜியைத் தேர்ந்தெடுத்தனர்.

அதேபோல திரிணமூல் காங்கிரஸின் 4 மாநிலங்களவை எம்.பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதில் 3 பேர் வெள்ளிக்கிழமையன்று பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பலம் 13லிருந்து 9 ஆகக் குறைந்தது.

SCROLL FOR NEXT