“பிரதமர் மோடியின் பிறந்தநாளில் ஆசிர்வாத தீபம்” - நிதின் நபின் வேண்டுகோள்

“பிரதமர் மோடியின் பிறந்தநாளில் ஆசிர்வாத தீபம்” - நிதின் நபின் வேண்டுகோள்
Updated on
1 min read

புது டெல்லி: ‘பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் மக்கள் தங்கள் வீடுகளில் 'ஆசீர்வாத தீபம்’ ஏற்றி, பிரதமரின் நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுமாறு பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோடியின் 25 ஆண்டுகால தொடர்ச்சியான பொதுச் சேவையை முன்னிட்டு நிதின் நபின் வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், ‘மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் நாட்டிற்குச் சேவையாற்றுவதே பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையின் வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது. பொதுச் சேவை மற்றும் தேசக் கட்டமைப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட மோடியின் 25 ஆண்டுகால அரசுத் தலைமைப் பணி இணையற்றது.

அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை நாட்டிற்கு ஒரு புதிய திசையையும் புதுப்பிக்கப்பட்ட வலிமையையும் அளித்துள்ளது. இன்று, அவர் ஊட்டிய கூட்டு உறுதிப்பாட்டின் உந்துதலுடன், வளர்ச்சியடைந்த இந்தியா- 2047 என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.

நாட்டின் இந்த முன்னேற்றப் பயணத்திற்கும், மோடியின் சிறப்பான தலைமைக்கும் நமது நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில், வரும் செப்டம்பர் 17 அன்று பிரதமரின் பிறந்தநாளையொட்டி மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் நம் வீடுகளில் 'ஆசீர்வாத தீபம்' ஏற்றுவோம். அவருக்கு நம் ஆசீர்வாதங்களை வழங்குவோம்; அவரது நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம்.

நான் ஆசிர்வாதத்தின் ஒரு தீபத்தை ஏற்றுவேன். அதேவேளையில் எனது சக இந்தியர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். வாருங்கள், நாம் அனைவரும் இணைந்து ஆசிர்வாதத்தின் தீபத்தை ஏற்றி, நமது பிரதமரின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

“பிரதமர் மோடியின் பிறந்தநாளில் ஆசிர்வாத தீபம்” - நிதின் நபின் வேண்டுகோள்
விநாயகப் பெருமான் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேற முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in