காஞ்சிபுரம்: சாலை விபத்து உயிரிழப்புகளை குறைக்க, பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
சட்டம் ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புப் பணிகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் ஆட்சியர் தி.சினேகா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாலாஜாபாத் வட்டம் வல்லப்பாக்கம் கிராமத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படுவதால் சுரங்கப்பாதையை ஒட்டி மாற்றுப்பாதை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரகடம் அருகே வாரணவாசி தொழில் வளாகத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், கனரக வாகனங்கள் வாரணவாசி முதல் தென்னேரி அகரம் வரையிலான குறுகிய கிராமச் சாலையைப் பயன்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் இடையூறுகள், தண்டலம் - கீவளூர் சாலை, பெரும்புதூர் - குன்றத்தூர் சாலை ஆகியவற்றில் உள்ள பழுதுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உத்திரமேரூர் வட்டம் நையாண்டிபாக்கம் - இளையனார் வேலூர் சாலையில் செய்யாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுவரும் பாலப் பணிகளை விரைந்துமுடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
விபத்து புள்ளி விவரங்கள்: இந்தக் கூட்டத்தில் சாலை விபத்துகள் தொடர்பான புள்ளி விவரங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 373 விபத்துகளும், அக்டோபர் மாதத்தில் 342 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.அக்டோபர் மாத விபத்துகளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில்,அக்டோபரில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், விபத்தில் சிக்கியவர்களை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செ.அரவிந்த்,மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ, கூடுதல் ஆட்சியர் ஆஷிக் அலி, சார் ஆட்சியர் தி.புவனேஷ் ராம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.