தமிழகம்

விஜய்யை பின்தொடர்ந்து சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயம்

வாகைகுளம், வண்ணார்பேட்டை உட்பட 4 இடங்களில் விபத்து

செய்திப்பிரிவு

தூத்துக்குடி / திருநெல்வேலி: தூத்​துக்​குடி, திருநெல்​வேலி​யில் தவெக தலைவர் விஜய் வாக​னத்தை பின்​தொடர்ந்து சென்​ற​போது, மோட்​டார் சைக்​கிள்​கள் விபத்​துக்​குள்​ளான​தில் 16 பேர் காயமடைந்​தனர்.

திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் போட்​டி​யிடும் தனது கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் செய்ய, தவெக தலை​வர் விஜய் நேற்று சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​துக்கு வந்​தார்.

          

காலை 11.45 மணிக்கு விமான நிலை​யத்தை வந்​தடைந்த அவருக்கு கட்சி நிர்​வாகி​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பின்​னர், பிரச்​சார வேனில் ஏறிதிருநெல்​வேலி நோக்கி விஜய் புறப்​பட்​டார்.

அவரது வேனை மோட்​டார் சைக்​கிள்​களில் பின்​தொடர்ந்து சென்ற இளைஞர்​களை போலீ​ஸார் ஆங்​காங்கே தடுத்து நிறுத்​தினர். வாகைகுளம் சந்​திப்பு பகு​தி​யில் சென்​ற​போது, அங்கு திரண்​டிருந்த தொண்​டர்​கள் விஜய்க்கு வரவேற்பு கொடுத்​தனர்.

பின்னர் மீண்​டும், திருநெல்​வேலி நோக்கி புறப்​பட்டபோது, வாகைகுளம் பகு​தி​யில் இருந்து தொண்​டர்​கள் மோட்​டார் சைக்​கிள்​களில் விஜய் சென்ற பிரச்​சார வேனை பின்​தொடர்ந்து சென்​றனர். ஒரு​வரையொரு​வர் முந்திச் செல்ல முயன்றபோது, இரண்டு மோட்​டார் சைக்​கிள்​கள் மோதி விபத்து ஏற்​பட்​டது.

கீழே விழுந்த மோட்​டார் சைக்​கிள் மீது பின்​னால் வந்த மோட்​டார் சைக்​கிள்​களும் மோதி விபத்து ஏற்​பட்​டது. இந்த விபத்​தில் 7 பேர் லேசான காயமடைந்​தனர்.

திருநெல்​வேலி பாளை​யங்​கோட்டை கேடிசி நகரில் பிரச்​சார பொதுக்​கூட்​டம் நடை​பெற்ற இடத்​தில் அமைக்​கப்​பட்​டிருந்த மேடை அருகே விஜய்​யின் வாக​னம் திரும்​பிய​போது கட்சி தொண்​டர்​கள், தடுப்​பு​களை மீறி வாக​னத்​தின் பின்​னால் ஓடினர்.

அப்​போது, காவல் துறை​யினர் சாலை​யில் தடுப்​பு​களை வைத்து மறித்​த​போது தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இந்த கூட்​டத்​தில் ஆம்​புலன்ஸ் வாக​னம் ஒன்​றும் மாட்​டிக்​கொண்டு வெளியே செல்ல முடி​யாத நிலை ஏற்​பட்​டது.

திருநெல்​வேலி வண்​ணார்​பேட்டை பகு​தி​யில் விஜய் பிரச்​சா​ரம் செய்​த​போது, சாலை​யின் இரு​புற​மும் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. அப்​போது, சாலையை கடக்க முயன்ற பெட்​ரோல் நிலைய ஊழியர் ஒரு​வர்​ மீது எதிர்​பா​ராத வித​மாக அரசு பேருந்து மோதி​யது. இதில் அவரது தலை மற்​றும் காலில் பலத்த காயம் ஏற்​பட்​டது.

உடனே அங்​கிருந்த இன்​ஸ்​பெக்​டர் கோகிலா அவரை மீட்டு தனது சொந்த வாக​னத்​தில் ஏற்​றி, திருநெல்​வேலி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தார்.

விஜய்​யின் வேனை பின்​தொடர்ந்த இருசக்கர வாக​னங்​கள் ஒன்​றோடொன்று மோதிய விபத்​தில் பொட்​டல் பகு​தி​யில் 6 பேர் காயமடைந்​தனர். நாரணம்​மாள் புரத்​தில் 2 பேர் காயமடைந்​தனர். இதன்படி மொத்​தம் 16 பேர் காயமடைந்​தனர்.

SCROLL FOR NEXT