சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளும் இன்று பதவி ஏற்கின்றனர். அவர்களுக்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 51 பேர் பணியில் உள்ளனர். காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 10 பேரையும், மாவட்ட முதன்மை நீதிபதிகளாக உள்ள 9 பேரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், முதல்கட்டமாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கே.கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியால், என். ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோரை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகவும், எஸ்.ரவீக்குமார், என். திலீப்குமார், இ.மனோகரன், டாக்டர் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 10 பேரை கூடுதல் நீதிபதிகளாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து புதிய நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் இன்று (ஆக.9) மதியம் 1.35 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் புதிய நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதற்கு முன்பாக கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் 15 நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன்பிறகு இப்போது ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகள் பதவியேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்து, காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.
முதல்வர் விஜய் வாழ்த்து: முதல்வர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் கே.கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர். ராஜேஷ் விவேகானந்தன், எஸ்,ரவிக்குமார், என்.திலீப்குமார், இ.மனோகரன் ஆகியோருக்கும், மாவட்ட முதன்மை நீதிபதிகளாக இருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி,சி.திருமகள், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவி்த்துக் கொள்கிறேன்.
நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சம நீதியும், சமூக நீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.