கோப்புப் படம்
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலி இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்.6-ம் தேதி வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அன்றைய தினமே தொடங்கியது. இதற்கான அடிப்படை கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்றபோதிலும், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியியல் படித்தவர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.5 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு இடத்துக்கு 226 பேர் போட்டி: இதற்கிடையே, அரசுப் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.8-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. குரூப்-4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு காலி இடத்துக்கு 226 பேர் என்ற அளவில் போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே அறிவித்தபடி, எழுத்து தேர்வு 2027 ஜனவரி10-ம் தேதி நடைபெற உள்ளது.