தென்காசி: திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கோயில் நிர்வாகி கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே காசிநாதபுரத்தில் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. இங்கு திருவிழா நடத்துவது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்துள்ளது.
ஒரு பிரிவுக்கு தலைவராக விநாயகம் என்பவரும், மற்றொரு பிரிவுக்கு தலைவராக மணிவேல் (45) என்பவரும் செயல்பட்டு வந்தனர். இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2015 செப். 2-ம் தேதி மணிவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்குள்ள கற்குவேல் அய்யனார் கோயிலுக்குச் சென்றனர். அப்போது, விநாயகம் தரப்பினர் அங்கு சென்று, மணிவேலிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது, மணிவேலை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
தடுக்க முயன்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், மணிவேலின் டிராக்டரும் சேதப்படுத்தப்பட்டது. இதில் காயமடைந்த மணிவேல் உட்பட 3 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மணிவேல் உயிரிழந்தார். இது தொடர்பாக பாப்பாக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, 17 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது, குற்றம் சுமத்தப்பட்ட முத்துக்குமார், பிச்சையா, முத்துராஜ் ஆகியோர் இறந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மனோஜ்குமார், குற்றம் சுமத்தப்பட்ட விநாயகம் (47), உலகநாதன் (48), சிவசுப்பிரமணியன் (38), சுடலை (29), சுப்பிரமணியன் (60), சந்தானம் (30), சிவன்சேட் (42), மாணிக்கராஜ் என்ற மாரி (29), வேல்துரை (43), கருப்பையா (57), ரமேஷ் (30), பண்டாரம் (73), மணிவேல் (43), கலைவாணன் (29) ஆகியோருக்கு கொலை குற்றத்துக்காக ஓர் ஆயுள் தண்டனை, கொலை முயற்சிக்கு ஓர் ஆயுள் தண்டனை, சொத்துகளை சேதப்படுத்தியதற்காக 3 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.41 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி ஆஜரானார்.