

திருச்சி: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஈரம் காயாத அளவுக்கு மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மரக்காணம் அருகே நேற்று கரை கடந்து செயலிழந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், மத்தியமாவட்டங்கள் வழியாக கேரள பகுதிக்குள் நகர்ந்து, அரபிக்கடலில் இறங்கியது.
இது கர்நாடகப் பகுதி வரை நீடித்திருந்ததால் நேற்று இரவு வரை தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய மழைப்பொழிவை கொடுத்தது.
அரபிக்கடலில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகரும்போது கிழக்கு காற்றை ஈர்க்கும் என்பதால், இன்று (டிச. 4) அதிகாலை முதல் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை இருக்கும்.
பின்னர் சில இடங்களில் வெயிலும், வெளிச்சமும் வந்து வெப்பம் உயர்ந்த பிறகு, அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் இருக்கும்.
நாளை மாலை நேரத்தில் ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை இருக்கும். மொத்தத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஈரம் காயாத அளவுக்கு மழை தொடரும்.
புதிதாக ஒரு காற்று சுழற்சி இலங்கை மற்றும் தென் மாவட்டங்கள் வழியாக அரபிக்கடல் நோக்கி நகரவிருப்பதால் வரும் 6, 7-ம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் சற்று கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும். தொடர்ந்து சில நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும். இவ்வாறு ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.