தமிழகம்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை தேவை: அன்புமணி

தமிழினி

சென்னை: மாணவர்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. ஒரு மாதம் பிரிந்திருந்த ஆசிரியர்களையும், நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சியில் பள்ளி திரும்பும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி தான். அள்ள அள்ள குறையாமல், மற்றவர்களுக்கு கொடுக்க, கொடுக்க பெருகும் செல்வமும் கல்வி தான். அதை ஏணியாக பற்றிக் கொண்டு மாணவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். இன்று தொடங்கும் நடப்பாண்டிற்கான மாணவர்களின் கல்விப் பயணம் மகிழ்ச்சியாக அமையட்டும்; அவர்களுக்கு அனைத்து சாதனைகளும் சாத்தியமாகட்டும்.

அதற்கு வசதியாகவும், மாணவர்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT