திருப்புவனம்: தமிழர்கள் வரலாற்றை மத்திய அரசு மறைக்கிறது என்பது தவறான தகவல் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக, பாஜக, தமாகா மற்றும் பல ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. இது மக்கள் நம்பிக்கை பெற்ற முதன்மை கூட்டணியாக உள்ளது. இந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும். தமிழக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேர வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால், தேர்தல் நெருங்கும் சமயத்தில், தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்படும். மாநிலங்களவை உறுப்பினர்களை பொறுத்தவரை, அவர்களை தேர்வு செய்யும் அளவுக்கு எம்எல்ஏக்கள் உள்ள கட்சிகள்தான் வேட்பாளர்களை அறிவிக்க முடியும். அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளர் குறித்து அக்கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.
கீழடி அகழாய்வு வரலாற்று சிறப்பு மிக்கது. அதன் அகழாய்வு முடிவுகளை அமர்நாத் ராமகிருஷ்ணன் சரியாக, முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். மத்திய அரசு கீழடி வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும். தமிழர்கள் வரலாற்றை மத்திய அரசு மறைக்கிறது என்பது தவறான தகவல்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் எந்த ‘சார்’ சம்பந்தப்பட்டிருந்தாலும் உச்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டோருக்கு தூக்கு தண்டனை கூட வழங்கலாம்.
பொதுவாக ஆளும்கட்சி வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதோடு, மக்கள் மீது அக்கறை, பயம் இருக்க வேண்டும். ஆனால் அது தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் தமிழக அரசு தமிழகம் மின்மிகை மாநிலம், குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று கூறி வருகிறது. அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்த நகைக் கடன் விதிமுறைகளை மத்திய அரசு மறுபரிசீலனையை செய்ய வேண்டும்” என்று அவர் அவர் கூறினார்.