

மதுரை; மதுரை மாவட்ட நீதிமன்றம் சாலையில் உள்ள பாதாளச் சாக்கடைகள் உடைந்து கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தச் சாலையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வழியில்லாமல் நடைபாதை, ‘கார் பார்க்கிங்’ ஆக மாறியுள்ளது.
மதுரை மாநகரில் மாவட்ட நீதிமன்றம், ராஜா முத்தையா மன்றம், மாநகராட்சி அலுவலகம் வழியாக செல்லும் தல்லாகுளம் சாலை மிக முக்கியமானது. இந்த சாலை வழியாகத்தான் தென் மதுரையில் இருந்து வரும் ஒட்டுமொத்த வாகனங்களும் மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்திற்கும், மேலூருக்கும் செல்கின்றன.
இந்த சாலையில் கே.கே.நகர் ரவுண்டானா சந்திப்பில் இருந்து ராஜா முத்தையா வரை செல்லும் மாவட்ட நீதிமன்றம் சாலையில், ஏராளமான ஹோட்டல்கள், சிக்கன் கடைகள் உள்ளன. இந்த ஹோட்டல்கள், கடைகள் முன் செல்லும் பாதாளச் சாக்கடை உடைந்து கழிவுநீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
இதனால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவிற்கு தூர்நாற்றம் வீசுகிறது. ஆனால், இந்த பாதாளசாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண, ஹோட்டல், கடை உரிமையாளர்கள் முன் வரவில்லை. இந்த ஹோட்டல்கள், கடைகளுக்கு பெரும்பாலும் கார்களில்தான் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.
அவர்களுடைய கார்களை நிறுத்துவதற்கு, இந்த ஹோட்டல்கள், சிக்கன் கடைகளிலும் கார் பார்க்கிங் இல்லை. அதனால், அவர்கள், கார்களை, மக்கள் நடந்து செல்வதற்கு இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நிறுத்திச் செல்கிறார்கள். அதனால், மக்கள், வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையிலே உயிர் பயத்துடன் நடந்து செல்கிறார்கள்.
மேலும், இந்த கழிவுநீரின் தூர்நாற்றத்திற்கு மத்தியில் உணவு, சிக்கன் விற்பனை நடக்கும் உணவகங்களை ஆய்வு செய்ய மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் வருவதில்லை. புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையாளர் இந்த சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார் பார்க்கிங், ஓடும் கழிவு நீருக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.