தமிழகம்

பாரதியார் பிறந்த இல்லம் சேதம்: சுற்றுலா பயணிகள் பார்வையிட வர வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள்

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லம் நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லத்தை பார்வையிட வர வேண்டுமென ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் நினைவு இல்லம் உள்ளது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் இந்த இல்லம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

இங்கு பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் உட்பகுதி கதவுகளை காப்பாளர் அடைத்த போது, திடீரென பாரதியார் இல்லத்தின் முன்பு பகுதியான வரவேற்பாளர் பகுதியின் மேல்மாடியின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ் தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் விழுந்தன.

இதன் காரணமாக பாரதியார் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இதையடுத்து உடனடியாக பாரதியார் இல்லத்துக்கு சென்ற மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது. இன்று முதல் பாரதியார் இல்லத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இல்லத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அந்த வழியாக யாரும் செல்ல முடியாத அளவுக்கு பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எட்டயபுரத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான பாரதியார் பிறந்த இல்லத்தின் மேல் தளம் மழையால் பாதிக்கப்பட்டு 25-ம் தேதி மாலை விழுந்துவிட்டது. இந்த இல்லத்தை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழக நிதியமைச்சர் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பாரதியார் பிறந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். பொதுப்பணி துறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் பாரதியார் பிறந்த இடம் முழுமையாக ஆய்வு செய்த பின்னர் விரைவில் மறு சீரமைக்கப்படும். அதுவரை சுற்றுலா பயணிகள் யாரும் பாரதியார் பிறந்த இல்லத்தை பார்வையிட வர வேண்டாம், என தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் 27 பேர் கைது: பாரதியார் பிறந்த இல்லம் பராமரிக்காத தமிழக அரசை கண்டித்து இன்று பாரதியார் இல்லம் முன்பும், மேல வாசல் பகுதியிலும் பாஜகவினர் எட்டயபுரம் மண்டல தலைவர் சரவணக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 27 பேரை போலீஸார் கைது செய்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT