

சென்னை: ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவருக்கு விதிகளை மீறி சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு இடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1994-ம் ஆண்டு ஆயுதப்படையில் எஸ்ஐ-யாக பணியில் சேர்ந்த முத்துமாணிக்கம், அதன்பிறகு ஆயுதப்படை டிஎஸ்பி-யாக பதவி உயர்வு பெற்றார். முத்துமாணிக்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த நிலையில் அவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு விதிகளை தளர்த்தி ஆயுதப்படையில் இருந்து உரிய பணிமூப்பு பட்டியலைக் கருத்தில் கொள்ளாமல் சட்டம் - ஒழுங்கு பிரிவில் கூடுதல் எஸ்பி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரிவு காவல்துறை அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, முதல்வரின் பாதுகாவலர் என்ற ஒரே காரணத்துக்காக 770 காவல்துறை அதிகாரிகளை பின்னுக்குத்தள்ளி, முத்துமாணிக்கத்துக்கு ஆயுதப்படைப் பிரிவில் இருந்து விதிகளை மீறி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றியது செல்லாது எனக்கூறி அதுதொடர்பான உத்தரவை ரத்து செய்தார். அதேநேரம் கூடுதல் எஸ்பி-யாக ஆயுதப்படையிலேயே பணியைத் தொடரலாம் எனவும் தீர்ப்பளித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து முத்துமாணிக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், “அவசர மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது மட்டுமே காவல்துறை விதிகளில் விலக்களிக்க முடியும். ஆனால், முதல்வரின் பாதுகாவலர் என்ற ஒரே காரணத்துக்காக மனுதாரருக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லாது. அதுதொடர்பான அரசாணையும் சட்டவிரோதமானது. எனவே, அதை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம்,” எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.