சென்னை: திமுக எம்.பி தயாநிதி மாறன் சென்னை மத்திய தொகுதியில் வெற்றி பெற்றது செல்லும் எனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தயாநிதி மாறன் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தேர்தல் பிரச்சாரம் கடந்த ஆண்டு ஏப்.17 அன்று நிறைவடைந்த நிலையில் ஏப்.19-ம் தேதியன்று வாக்காளர்களைக் கவரும் வகையில் திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் பத்திரிகைகளில் முழு பக்கம் விளம்பரம் கொடுத்தது தேர்தல் விதிமீறல் மட்டுமின்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிரானது. மேலும் அவர் பிரச்சாரத்துக்கு செலவு செய்தது, விளம்பரச் செலவு, பூத் ஏஜெண்டுகளுக்கான செலவு போன்றவற்றையும் முறையாக தெரிவிக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட செலவுத் தொகையான ரூ.95 லட்சத்தைக் காட்டிலும் தயாநிதி மாறன் கூடுதலாக செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்பதால், தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வழக்கில் இருந்து நீக்கக் கோரி தயாநிதி மாறன் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது தயாநிதி மாறன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கறிஞர் எம்.சினேகா ஆகியோரும், வழக்கு தொடர்ந்த எம்.எல்.ரவி தரப்பில் வழக்கறிஞர் சிவஞானசம்பந்தனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், திமுக எம்.பி தயாநிதி மாறனுக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.