மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: அமித் ஷா பேச்சு

மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: அமித் ஷா பேச்சு
Updated on
1 min read

ராணிப்பேட்டை / அரக்கோணம்: “மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் சிஐஎஸ்எப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது.” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) தினத்தையொட்டி, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிஐஎஸ்எஃப் பெருமைகளைப் பறைசாற்றும் நூலையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்த பிறகுதான் சிஐஎஸ்எப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை தமிழில் படிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இதை அவர் விரைவில் செய்வார் என நான் நம்புகிறேன். ஏனெனில் இதனை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன்.

பிரதமர் மோடி, தமிழுக்கும் அதன் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார். தமிழகத்தின் வளமான கலாச்சாரம், இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி உள்ளது.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாக மாற்ற பிரதமர் மோடி சபதம் எடுத்துள்ளார். 2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றவும் அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த இலக்குகளை அடைவதற்கு சிஐஎஸ்எப் பெரிதும் பங்களிக்கிறது. கடந்த 56 ஆண்டுகளாக சிஎஸ்ஐஎஃப்பின் சேவை அளப்பரியது. நாட்டின் பெரிய தொழில் கட்டமைப்புகள், மக்கள் போக்குவரத்து, சுற்றுலா தளங்கள், ஆராய்ச்சி மையங்கள் என எல்லாவற்றிலும் சிஎஸ்ஐஎஃப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாட்டில் அன்றாடம் சுமார் 1 கோடி பேரின் பாதுகாப்பான பயணத்தை சிஐஎஸ்எஃப் உறுதி செய்கிறது.” இவ்வாறு அமித் ஷா பேசியுள்ளார்.

முன்னதாக இன்று, ‘இந்தித் திணிப்பை எதிர்ப்போம்’ என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு 10வது கடிதத்தை எழுதிய மு.க.ஸ்டாலின், “திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல; வலிந்து திணிக்கப்படும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும் என்பதை நடைமுறை எதார்த்தத்துடன் கடைப்பிடித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in