உதகை: பைக்காரா படகு இல்லத்தில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் நகரில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களை பார்ப்பது மட்டுமில்லாமல், நகருக்கு வெளியே உள்ள பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி, அப்பர்பவானி உட்பட்ட சுற்றுலா தலங்களையும் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
உதகை - கூடலூர் சாலையில் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன.அங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். பைக்காரா பாடல்கள் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, தற்போது, 30 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், 19 எட்டு இருக்கை மோட்டார் படகுகள்; 10 இருக்கை மோட்டார் படகு ஒன்று, 15 இருக்கை மோட்டார் படகு ஒன்று, 7 மூன்று இருக்கை அதிவேக படகுகள் உள்ளன.
தவிர, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, 5 இருக்கை கொண்ட ஒரு உல்லாச படகு மற்றும் இரண்டு ‘வாட்டர் ஸ்கூட்டர்’ ஆகியவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பைக்காரா அணை மின் உற்பத்திக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த அணை மின் உற்பத்திகாக திறந்து விடும் போது, அணையில் இருந்து வெளியேறும் நீர் பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக பாறைகளின் நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தும் ஓடும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.
தற்போது, நாள்தோறும் பைக்காரா நீர் மின் நிலையத்தில் 2 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பைக்காரா அணையில் தண்ணீர் இருப்பு குறைந்து, தண்ணீர் வெளியேற்றப்படுவது குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பைக்காரா ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது.ஆனால், பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது. நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
அணையின் முழு கொள்ளளவு ஆன 110 அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 46 அடி குறைந்து, இருப்பு 64 அடியாக உள்ளது.
பைக்காரா படகு இல்ல ஊழியர்கள் கூறும் போது, ‘பருவ மழை போதுமான அளவு பெய்து அணை முழுமையாக நிரம்பியது. இந்நிலையில், தற்போது மின் உற்பத்தி காரணமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அணையில் நீர் குறைந்துள்ளது. இருப்பினும் படகு சவாரி செய்வதில் சிக்கல் இல்லை. படகு இல்லத்தில் வழக்கம் போல் படகுகள் இயக்கப்படுகின்றன’ என்றனர்.