

புதுச்சேரி: வில்லியனூரில் அதிமுகவினர் திறந்த எம்ஜிஆர் சிலையை மீண்டும் திறக்க ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்ற நிலையில், அவர்களுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பும் எதிரெதிரே நின்று கோஷம் எழுப்பினர். இறுதியில் சிலையை நோக்கி சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுவை வில்லியனுார் மூலக்கடை சந்திப்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை இருந்தது. 1996-ல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த சிலையை திறந்து வைத்திருந்தார். இந்த சாலை புறவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டபோது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்டது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின் புதிதாக எம்ஜிஆர் வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிலையின் கல்வெட்டில் தங்கள் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அதிமுக உரிமை மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர். தங்களின் பெயரும், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பெயரும் இடம்பெற வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனிடையே புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், வெள்ளிக்கிழமை மாலை எந்த முன் அறிவிப்புமின்றி கட்சி நிர்வாகிகளுடன் சென்று எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார்.
இதையடுத்து அதிமுக உரிமை மீட்பு குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் அந்த சிலையை திறக்க உள்ளதாக அறிவித்தனர். இதற்கு புதுவை அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சிலைக்கும், மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது என போலீஸாரிடம் அதிமுகவினர் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று வில்லியனுார் புறவழிச்சாலை சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். இப்பகுதியில் ஒருபுறம் அன்பழகன் தலைமையில் அதிமுகவினரும், மறுபுறம் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்திசேகர் தலைமையில் அதிமுக உரிமை மீட்பு குழுவினரான ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்தோரும் நின்றிருந்தனர். மேலும் அவர்கள் எதிர்எதிராக நின்று கோஷம் எழுப்பியதால் அங்கு கடும் பதற்றம் ஏற்பட்டது.
அப்போது போலீஸார் ஓம்சக்தி சேகரிடம், சிலைக்கு மாலை அணிவிக்க எந்த தடையும் இல்லை, ஆனால் திறப்பதற்கு அனுமதியில்லை என தெரிவித்தனர். ஓம்சக்தி சேகரும், அவரின் ஆதரவாளர்களும் இதனை ஏற்கவில்லை. போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலையை திறப்போம் என குறிப்பிட்டப்படி இருந்தனர்.
இதையடுத்து ஓம்சக்தி சேகர் தலைமையிலான உரிமை மீட்பு குழுவினர் சிலையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோரை கைது செய்தனர். எம்ஜிஆர் சிலைக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.