தமிழகம்

ஜெயலலிதா பிறந்த நாளுக்கு அரசு சார்பில் மரியாதை - அமைச்சர்கள் பங்கேற்பர் என தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெறவிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பிப்., 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) உள்ள ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, "ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு அவரவர் சக்திக்கேற்ப உதவிகளைச் செய்ய வேண்டும். அன்று கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு வர்ணம் பூசி, கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்தும், கட்சிக் கொடியை ஏற்றிவைத்தும் கொண்டாட வேண்டும். அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை கட்சியினர் வழங்க வேண்டும்" என் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT