ராமேசுவரம்: இந்திய நிதி உதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என பெயர் மாற்றறம் செய்யப்பட்டு பெயர் பலகையும் பொருத்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை சுற்றுப் பயணத்தின் போது சுமார் 11 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையத்துக்கான அடிக்கல் நாட்டினார். 600 இருக்கைகள் கொண்ட அரங்கு, திறந்த வெளி மைதானம், கணினி நூலகம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. பணிகள் நிறைவடைந்து யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தின் திறப்பு விழா 11.02.2023 அன்று நடைபெற்றது. கலாச்சார மையத்தை அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த கலாச்சார மையமானது இந்திய-இலங்கை இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை பிரதிபலிப்பாக அமைந்தது.
கடந்த ஜனவரி 18-ம் தேதி யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தில் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் பேரா ஹினிதும சுனில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்க் கவிஞரும் தத்துவஞானியுமான திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில், யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாச்சார மையம்’ என மறுபெயரிடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு: இது தொடர்பாக பிரதமர் நரேந்திரே மோடி தனது எக்ஸ் பதிவில், ‘தலைசிறந்த புலவா் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதோடு, இருநாட்டு மக்கள் இடையிலான ஆழமான கலாச்சார, மொழி, வரலாறு மற்றும் நாகரிகம் ரீதியிலான பிணைப்புக்கு சாட்சியாக இது அமைந்துள்ளது’ என தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை, மொழி, கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பாஜக கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
வாக்குறுதியின்படி உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். தற்போது இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என தெரித்திருந்தார்.
ஆனால், திருவள்ளுவர் கலாச்சார மையம்' என பெயர் சூட்டியதற்கு இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) 'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என பெயர் மாற்றறம் செய்யப்பட்டு பெயர் பலகையும் பொருத்தப்பட்டது.