“டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக செய்தது மக்களை ஏமாற்றும் அரசியல்” - எல்.முருகன் தாக்கு

மத்திய அமைச்சர் முருகன் | கோப்புப் படம்
மத்திய அமைச்சர் முருகன் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் அரசியலை திமுக செய்தது. கடந்த 2021 முதல் மத்திய அரசு கேட்டபோது இத்திட்டம் வேண்டாம் என ஒருமுறை கூட திமுக சொன்னதில்லை என மத்திய அமைச்சர் முருகன் குற்றம்சாட்டினார்.

புதுவை பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடந்த சர்வதேச உளவியல் மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், அம்பலக்காரர்கள், மத்திய கனிம வளத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். அப்போது டங்ஸ்டன் சுரங்கம் வருவதால் அப்பகுதியில் தொல்லியல் பகுதி, விவசாய பாதிப்பு, பிற பாதிப்புகளை விளக்கி கூறினர். இதனடிப்படையில் பிரதமர் மோடியுடன் ஆலோசித்து, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார். இதற்காக மதுரை மேலுார் பகுதி மக்கள் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

சுரங்க விவகாரத்தில் திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடிய விளையாட்டு அரசியலை செய்தது. 2017-ம் ஆண்டு முதல் சுரங்கம் அமைப்பதற்கான நடைமுறை பணிகளாக சர்வே உள்ளிட்டவை நடந்து வந்தது. 2021-ம் ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டது. மத்திய அரசு கேட்கும்போது தமிழக அரசு ஏதும் சொல்லவில்லை. ஏலத்துக்கும் வரும்போது, மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் தாங்களும் எதிர்ப்பதாக திமுக பொய்யான பிம்பத்தை காட்டி தவறான தகவலை மக்கள் மத்தியில் திமுக பரப்பியது. கடந்த 2021 முதல் 2024 வரை மத்திய அரசு கேட்டபோது வேண்டாம் என திமுக ஒருமுறைக்கூட சொல்லவில்லை. மக்கள் பக்கமும் விவசாயிகள் பக்கமும் நாங்கள் இருக்கிறோம் என பிரதமர் இத்திட்டத்தை நிறுத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in