சிவகங்கை: டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த ரத்துக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சிவகங்கையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. செந்தில்நாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்துக்கு பின் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து தங்களால் நடந்ததாக திமுக கூறுகிறது. திமுக வழக்கம்போல் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்று. தமிழக அரசுக்கும், டங்க்ஸ்டன் சுரங்க ஒப்பந்த ரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
டங்க்ஸ்டன் சுரங்க விவகாரத்தை திமுக அரசு 4 ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை. அதிமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் மத்திய அரசு ரத்து செய்தது. பரந்தூர் விமான நிலையத்தில் மக்களுக்கு புரிதல் இல்லை என ஹெச்.ராஜா சொல்லியது உண்மை தான். எங்கள் ஆட்சியின்போதும் ஒரு சில திட்டங்களுக்கு மக்கள் புரிதல் இல்லாததாலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்.
விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக்காரர்களை சந்தித்தது குறித்து பேச வேண்டியது எதுவும் இல்லை. அவர் கட்சி, அவர் செயல்படுகிறார்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் கடனை ஒப்பிட்டு பாருங்கள். யார் தமிழகத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியது எனத் தெரியும். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.3 லட்சம் கடன் சுமை உள்ளது. அது தான் இந்த ஆட்சியின் லட்சணம். சபாநாயகர் அப்பாவு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆளுநரை மனிதராகவே மதிப்பது இல்லை. அதிமுகவை பொருத்தவரை ஆளுநரை சட்டத்தின்படி மதிக்கிறோம். அவரின் செயல்பாடுகள் சட்டத்துக்குட்பட்டு இருந்தால் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.