Published : 24 Jan 2025 12:30 PM
Last Updated : 24 Jan 2025 12:30 PM

அன்றிரவு நடந்தது என்ன? - தாக்குதல் சம்பவம் குறித்து சயீப் அலி கான் வாக்குமூலம்

மும்பை: சயீப் அலி கான் வீட்டில் கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய நிலையில், தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16-ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் சயீப் அலிகான் இருந்தபோது, அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு மூலம்: இந்நிலையில், சயீப் அலி கான் இது குறித்து போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், “இந்தச் சம்பவம் நடந்தபோது நானும், என் மனைவி கரீனாவும் படுக்கை அறியில் இருந்தோம். அப்போது என் வீட்டில் உதவியாளராக பணி புரிந்துவரும் எலியாமா பிலிப்பின் (Eliyama Phillip) அலறல் சத்தம் கேட்டது. அதாவது, எலியாமா பிலிப் தான் என்னுடைய இளைய மகனான ஜஹாங்கீரை பார்த்துக் கொள்கிறார். இதனால் பொதுவாகவே ஜெஹாங்கீரின் அறையில் தான் எலியாமா பிலிப் தூங்குவார். எலியாமா பிலிப்பின் சத்தம் கேட்டவுடன் என்னவென்று பார்க்க சென்றேன். அப்போது ஜெஹாங்கீர் அழுது கொண்டு இருந்த நிலையில், அந்த மர்ம நபரைப் பிடிக்க முயன்றேன்.

எப்படியோ அந்த மர்ம நபரை, பிடித்து அறையில் அடைத்தோம். இதனால் அந்த மர்ம நபர் முதுகு, கழுத்து மற்றும் கைகளில் பலமுறை குத்தினான். பின்னர் அந்த நபர் தப்பித்துவிட்டான். எலியாமா தான் முதலில் அந்த மர்ம நபரைப் பார்த்துள்ளார். ஜெஹாங்கீரின் அறையில் புகுந்த அந்த நபர் ஒரு கோடி ரூபாயைக் கேட்டு மிரட்டியதாக எலியாமா தெரிவித்தார். இந்த மோதலில் வீட்டு உதவியாளர் எலியாமாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து என்னை உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்” என்றார்.

சயீப் அலி கானின் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த நபர் திருடும் நோக்கத்துடன் உள்ளே நுழைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்பது தெரியவந்துள்ளது. இவர் தானேயில் கைது செய்யப்பட்டார். மேலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தாக்குதல் நடந்த சயீப் அலி கானின் வீட்டில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் ஷரிபுலின் கைரேகைகளுடன் ஒத்துப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த குழாய் மூலமாகவே அந்த நபர் 11ஆவது மாடிக்கு ஏறியதாகவும் அந்த குழாயில் இருந்தே கைரேகைகள் எடுக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும். அதில் இரண்டு காயங்கள் ஆழமாக இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக ஒரு காயம் அவரது முதுகு தண்டுவடத்திற்கு மிக அருகே ஏற்பட்டுள்ளது. மேலும், கழுத்து மற்றும் கையில் ஏற்பட்ட காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. சுமார் ஒரு வாரம் சிகிச்சை பெற்ற சயீப் அலி கான் கடந்த ஜனவரி 21ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x