தமிழகம்

நெல்லையில் நீடிக்கும் மழையால் தாமிரபரணியில் வெள்ளம்

அ.அருள்தாசன்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாநகரப் பகுதிகளில் இன்று (டிச.14) காலை முதலே மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று காலையில் மழையின் அளவு குறைந்துள்ளது. 118 அடி கொள்ளளவுள்ள மணிமுத்தாறு அணையில் தற்பொழுது 91 அடி தண்ணீர் உள்ளது. 143 அடி கொள்ளளவுள்ள பாபநாசம் அணையில் 82 அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து சுமார் 2,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகரப் பகுதியில் சுமார் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்பொழுது சென்று கொண்டிருக்கிறது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் இரவு முழுவதும் மழை பெய்து இன்று அதிகாலை முதல் சாரல் மழையாக மாறி உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முக்கூடலில் முகாமிட்டு அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடுதாழை, உவரி, இடிந்தகரை, கூத்தன் குழி ,பெருமணல், உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சார்ந்த சுமார் 8000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 1500 க்கு மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT