புதுக்கோட்டை: “வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வகுக்கும் வியூகம் வெல்லும்,” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: “ஆழ்கடலில் கப்பல் செல்லும்போது ஆடும், அசையும். அதைப் போன்று ஆரம்பத்தில் அதிமுகவும் லேசாக ஆடி, அசைந்தது. அதற்குப் பயந்து கட்சியில் இருந்து விலகி தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடியவர்கள் பரிதாபமாக உள்ளனர். ஆனால், அதிமுக எனும் கப்பலை பொதுச் செயலாளர் பழனிசாமி நேர்த்தியாக இயக்கி வருகிறார்.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மடிக்கணினி, தாலிக்குத் தங்கம், மானிய விலை ஸ்கூட்டர் போன்ற பல்வேறு திட்டங்களை நிறுத்தியும், மின் கட்டணம், வீட்டு வரியை உயர்த்தியும் உரிமைத் தொகை எனும் பெயரில் மாதம் ரூ.1,000 வீதம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டதில் 2 அமைச்சர்கள் இருந்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்த ஆட்சியைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தாத நாளே இல்லை என்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்கள் விரக்தியில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வேறு, சட்டப்பேரவைத் தேர்தல் வேறு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலானது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியா? திமுக தலைவர் ஸ்டாலினா? என்பதற்கான தேர்தல். அதிமுக வகுக்கும் புதிய வியூகம் வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் வெல்லும். பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமையும்,” என்று அவர் பேசினார். முன்னதாக, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.