

சென்னை: அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கும் செயல்வீரர் கூட்டங்களை வரும் அக்.23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு கட்சியினருக்கு பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுச் சென்ற நிர்வாகிகளில் சிலர், சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்களிடம், உறுப்பினர் அட்டைகள் வழங்கும் பணியை இன்னும் நிறைவு செய்யவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. எனவே, நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் கட்சி உறுப்பினர் அட்டைகளை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கும் பணி நிறைவு பெற்றவுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, மாநகராட்சிப் பகுதி வாரியாக கட்சி செயல்வீரர் ஆலோசனைக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதில் கட்சியின் தலைமை செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், ஒன்றியம், நகரம் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி அளவில் நடைபெறும் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏ.க்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதி அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த ஆலோசனைக் கூட்டங்களை வரும் அக்.23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அவ்வாறு நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களின் கையொப்பங்களை மினிட் புத்தகங்களில் பெற்று, அதன் நகலை தலைமைக்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.