கருப்பசாமி, தருண்குமார், ராஜ்குமார், பாண்டிசெல்வம், திருப்பதி, பொன்முத்து, மீனாட்சி, சபரிநாதன், ரெஜின், இளங்கோவன்
தேனி: தேனி மாவட்ட சிறையிலிருந்து காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். எஞ்சிய 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக முதன்மை தலைமை வார்டன் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இச்சிறையில் 4 பிளாக்குகளில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், 3-வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி கைதிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாரா காவலர் ஸ்டாலின் பிரபு, பிளாக்கின் கதவைத் திறந்து உள்ளே சென்றார்.
முத்து இளங்கோவனுக்கு ஏற்கெனவே வலிப்பு நோய் இருந்ததால், கைதிகள் கூறியதை காவலர் நம்பியதாகக் கூறப்படுகிறது. அவர் உள்ளே சென்றதும், திட்டமிட்டிருந்த கைதிகள் போர்வையைப் போர்த்தி அவரைச் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த காவலர் நிலைகுலைந்து விழுந்தார்.
இதையடுத்து 17 கைதிகளும் பிளாக்கிலிருந்து வெளியேறி, மேலும் 3 காவலர்களையும் தாக்கிவிட்டு அருகிலிருந்த வனப்பகுதிக்குள் தப்பியோடினர். தகவலறிந்த போலீஸார் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர்.
25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறையைச் சுற்றியுள்ள 10 கி.மீ. சுற்றளவில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. கைதிகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களுடன் வாகனங்கள் சோதனையிடப்பட்டன. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கைதிகளின் சொந்த ஊர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்களும் கண்காணிக்கப்பட்டன.
நிஷாந்த், கார்த்திக்ராஜா, லிங்கபிரசாத், ராஜா சிக்கந்தர், சிலம்பரசன், முகிலேஸ்வரன், பிரவீன்குமார்
முதற்கட்டமாக பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், லிங்கபிரசாத் ஆகிய 5 பேர் பிடிபட்டனர். தொடர்ந்து, வனப்பகுதியில் ட்ரோன்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் கருப்பசாமி, தருண்குமார், பாண்டி செல்வம், சபரிநாதன், நிஷாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக் ராஜா, சோலை முகிலேஸ்வரன் ஆகிய 8 பேர் சிக்கினர். இதுவரை 13 கைதிகள் பிடிபட்டுள்ள நிலையில், எஞ்சிய 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கைதிகளின் தாக்குதலில் காயமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மதன்மோகன் மற்றும் காவலர்கள் தங்கப்பாண்டி, ஸ்டாலின் பிரபு, பால்பாண்டி ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கண்டமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதிகள் தப்பிய தகவல் கிடைத்ததும், தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, டிஐஜி அபினவ்குமார், தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கவுதம் ஆகியோர் சிறைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ஐஜி கனகராஜ், டிஐஜி முருகேசன், மதுரை மத்திய சிறை எஸ்பி கிருஷ்ணராஜ் ஆகியோரும் சிறைக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். பணியில் இருந்த காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக முதன்மை தலைமை வார்டன் மதன்மோகன் மற்றும் இரண்டாம், முதல்நிலை காவலர்களான ஸ்டாலின் பிரபு, தங்கப்பாண்டி, ரமேஷ், கணபதி, வேலுச்சாமி, ராஜீவ்காந்தி, விக்னேஷ், ஜெயசீலன் ஆகிய 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் புழல் சிறையிலிருந்து 2 கைதிகள் தப்பிய நிலையில், தற்போது தேனி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் தலைமையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. காவல்துறை மற்றும் சிறைத்துறை உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தேனி சிறையில் கைதிகள் தப்பியோடிய விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதனுடன், மாநிலத்தில் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.